முதன்முறையாக ஜூலை மாதம் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
மாதவரம், ஆக.2: முதன்முறையாக ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயன் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 4.7.2025 அன்று 3,74,948 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 6,55,991 பயணிகள், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 45,66,058 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 51,56,786 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடியை மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.
மாதம் பயணிகளின் எண்ணிக்கை
ஜனவரி 86,99,344
பிப்ரவரி 86,65,803
மார்ச் 92,10,069
ஏப்ரல் 87,89,587
மே 89,09,724
ஜூன் 92,19,925
ஜூலை 1,03,78,835