ரூ.5.34 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
திருத்தணி, ஆக 1: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுதோறும், சாகுபடி செய்த கரும்புகளை லாரிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு அரவைக்கு 1526 விவசாயிகள் அனுப்பிய 1.60 லட்சம் டன் கரும்புக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை விலை டன் ஒன்றுக்கு தலா ரூ.349 வீதம் ரூ.5.34 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. வழக்கமாக ஊக்கத்தொகை அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டு வந்த நிலையில், கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்னதாகவே அரசு வழங்கியதால், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். நடப்பு ஆண்டில் பரிந்துரை விலையுடன் சிறப்பு ஊக்கத்தொகையும் விரைவாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.