கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரத்தான் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்
கும்மிடிப்பூண்டி, ஆக. 1: கும்மிடிப்பூண்டி அடுத்த சேலியம்பேடு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் மங்காவரத்தான் 53 அடி பத்ரகாளி அம்மன் கோயிலில் 12ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 28ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்வும், 29ம் தேதி பால் குடம் ஊர்வலம், அம்மன் கரகம் ஊர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கிராம மக்கள் தங்களது வீடுகளில் கூழ்வார்த்தனர். கோயிலில் ‘வாடை பொங்கல்’ வைத்து அம்மனை வணங்கினர். தொடர்ந்து, காப்பு கட்டிய 112 பேர் வேப்பிலை ஆடை அணிந்தும் நாவில் அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மாலையில் தீக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவைக் காண பள்ளிப்பாளையம், தேவம்பட்டு, அகரம், ரெட்டம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் மங்காவரத்தான் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீமிதி திருவிழாவையொட்டி நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.