திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.71 கோடி வசூல்: 649 கிராம் தங்கம், 14,000 கிராம் வெள்ளி குவிந்தது
திருத்தணி, ஜூலை 24: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக ரூ.1.71 கோடி செலுத்தியுள்ளனர். திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தில் முதல் கிருத்திகையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து உண்டியல்களில் நகை, பணம், பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.
இந்நிலையில் கடந்த 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் உஷா ரவி ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை திறந்து வசந்த மண்டபத்தில் எண்ணப்பட்டது. கோயில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இணைந்து 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற பணி முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.64 கோடி ரொக்கம், திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ. 7.17 லட்சம் என மொத்தம் ரூ.1.71 கோடி காணிக்கையும், 649 கிராம் தங்கம், 14,007 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.