ஆர்.கே.பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி விறுவிறு
ஆர்.கே.பேட்டை, ஜூலை 24: ஆர்.கே.பேட்டை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது.
குறிப்பாக ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன காகிதக்கூழ் கொண்டு உருவாக்கப்படும், விநாயகர் சிலைகள் 1 முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் சிலைகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்தாண்டு புதிய வரவாக, சிவன் விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சிங்க விநாயகர், பால விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. வழக்கமான திருமூர்த்தி விநாயகர், பஞ்சமூர்த்தி விநாயகர், ராஜ விநாயகர் என 30க்கும் மேற்பட்ட வகைகளில் விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுகின்றன.
இதற்கான மூலப்பொருட்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிலைகள் செய்யப்படுகிறது. வழக்கத்தை விட, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள் ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.