சோழவரம் அருகே அடுத்தடுத்து மர்மமாக இறந்த தெரு நாய்கள்: விஷம் வைத்து கொன்றதாக புகார்
புழல்: சோழவரம் அருகே தெரு நாய்கள் அடுத்தடுத்து மர்மமாக இறந்ததையடுத்து அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் நாளுக்குநாள் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் நடமாடும் பொதுமக்களை நாய்கள் கடித்து குதறி, அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தெரு நாய்கள் தொல்லையில் இருந்து மக்களை பாதுகாத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் சோழவரம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில் சில தெருநாய்கள் அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தெரு நாய்களின் அட்டகாசம் காரணமாக அவற்றிற்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.