பள்ளிப்பட்டு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
பள்ளிப்பட்டு, ஜூலை 25: பள்ளிப்பட்டு அருகே, பொம்மராஜூபேட்டையிலிருந்து மேலபூடி செல்லும் ஒன்றிய சாலையோரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் மூலம் சுமார் 500 மீட்டர் தூரம் பள்ளம் எடுக்கப்பட்டது. அங்குள்ள நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் விட மேலபூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் பள்ளம் மூடப்படாமல் உள்ள நிலையில் அவ்வழியாக மேலபூடி, சொரக்காய்பேட்டை, நெடியம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வரும் கிராம மக்கள் சுமார் 4 அடி ஆழத்தில் பள்ளம் எடுக்கப்பட்டுள்ளதால், குறுகிய சாலையில் பேருந்துகள், ஆட்டோ, கார்களில் செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், மழைநீர் வடிகால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று மேலபூடி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.