மீஞ்சூரில் ஆமை வேகத்தில் ரயில்வே மேம்பால பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பொன்னேரி, ஜூலை 26: சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் மத்திய, மாநில அரசு அனுமதி பெற்று சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் கடந்த 2016ம் ஆண்டு மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், மீஞ்சூர்-காட்டுர் சாலை அரியன்வாயல் பகுதியில் இருபுறங்களிலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினர், ரயில்வே பணிக்காக இருபுறமும் சாலை இணைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ரயில்வே மேம்பால பணியில் இழுபறி ஏற்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள வீடு, கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 18 மாதங்கள் கணக்கிட்டு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ரயில்வே மேம்பால பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே கேட்டை கடந்து செல்லும் நடைபாதையை ரயில்வே துறையினர் கிரில் கேட் வைத்து அடைத்தனர். இதனால், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். ரயில் போக்குவரத்து காரணமாக கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் காத்திருந்து செல்கின்றனர். எனவே, மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.