கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் உயர்வு
மாதவரம், ஜூலை 24: ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை மீண்டும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.400லிருந்து ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், முல்லை ரூ.250ல் இருந்து ரூ.300க்கும், ஜாதிமல்லி ரூ.300ல் இருந்து ரூ.400க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.600க்கும், அரளி ரூ.150ல் இருந்து ரூ.200க்கும், சாமந்தி ரூ.150ல் இருந்து ரூ.180க்கும், சம்பங்கி ரூ.80ல் இருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக பூக்களின் விலை தீடீரெஅன குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்ததால் வியாபாரமும் சுறுசுறுப்பாகவும் நடந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்றும் இன்னும் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.