திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறுவது முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கி பேசுகையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025- 2026ம் ஆண்டு மாவட்ட அளவில் 22.08.2025 முதல் 12.09.2025 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய 5 பிரிவுகளில் 53 வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் மண்டல அளவில் 14 வகையான போட்டிகளும் என மொத்தம் 67 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதையொட்டி குடிநீர், தற்காலிக கழிப்பறை, விழா மேடை அமைத்தல், மைதானம் தூய்மை செய்தல் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறும் நாளான ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 12ம் தேதி வரை அனைத்து இடங்களிலும் சுகாதாரக் குழுவுடன் ஆம்புலன்ஸ் எற்பாடு செய்ய வேண்டும், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை உதவியாளராக நியமனம் செய்ய வேண்டும். மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும், என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.