திருப்போரூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என சட்ட மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர். அதன்படி திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக இந்து அறநிலையத்துறை சார்பில் திருமணம் நடத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களில் கடந்த 3ம் தேதி 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேலும் 5 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று காலை கோயில் உற்சவ மண்டபத்தில் முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. திருமண ஜோடிக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 கிராம் தங்கத் தாலி, 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மணமக்கள் ஆடை, 2 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மணமக்கள் தரப்பைச் சேர்ந்த 20 நபர்களுக்கு உணவு, மாலை, 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணை தலைவர் பரசுராமன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலர் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.