மழையின் போது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது: மின்வாரியம் அறிவுறுத்தல்
தேனி, அக். 31: மாவட்டத்தில் கனமழைக்கு பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அதுபற்றிய தகவலை அருகில் உள்ள மின் பிரிவு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு ஐ.எஸ்.ஜ. தரசான்று பெற்ற மின் சாதனைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
பழுதடைந்த மின்பாதைகள், மின்கம்பங்கள், மின் இழுவைக்கம்பிகள் ஆகியவை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்கம்பம், மின் வழித்தட கம்பிகளில் துவைத்த துணிகளை காயவைப்பது, ஆடு மாடுகளை கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதியின்றி தன்னிச்சையாக மின் வேலி அமைக்கக்கூடாது.
அது தண்டனைக்குரிய குற்றமாகும். மின் வழித்தட கம்பியில் பந்தல் மற்றும் விளம்பர பலகை அமைக்கக்கூடாது. மின் பாதை அடியிலோ, அருகிலோ கட்டடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக புதிதாக வீடு கட்டும் பொழுது ஏற்கனவே உள்ள வீட்டு மின் இணைப்புகளிலும் கண்டிப்பான இஎல்சிபி (பிரேக்கர்) நிறுவப்பட வேண்டும். இதனால் விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
