கலெக்டர் அலுவலக வளாக நூலகத்தில் போட்டி தேர்வுக்கான சிறப்பு பிரிவு
தேனி, ஆக.27: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் சிறப்பு பிரிவினை கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஜூன் 10ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், இலக்கிய மொழி பெயர்ப்பு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் உள்ளிட்ட நூல்கள் உள்ளன.
மேலும், தற்போது தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுக்கு தேவையான புத்தகங்களும், குடிமைப் பணிகள் தேர்வுக்கு தேவையான புத்தகங்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு பிரிவினை நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்து, நூலகத்தை பார்வையிட்டார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமாதவன், இரண்டாம்நிலை நூலகர் விஜயமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.