மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆண்டிபட்டி, செப். 26: ஆண்டிபட்டி நகர் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நகரில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகர் பகுதி கேரளாவை இணைக்கும் பிரதான சாலையாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் நகரின் இரு புறங்களிலும் சாலையோரங்களில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் சாலை அகலம் 20 அடி வரை குறைந்தது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிபட்டி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி வருவாய் துறையினர் பேரூராட்சி நிர்வாகம்,
நெடுஞ்சாலை துறையினர் நிலஅளவை துறையினர் மின்துறையினர் என அனைவரும் சேர்ந்து ஆண்டிபட்டி பேரூராட்சி எல்லைப் பகுதியான சக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி வரை ஆக்கிரப்புக்களை அகற்றும் பணியை துவக்கினர். இப்பணிகள் 3 நாட்கள் வரை நீடிக்கும் என்றும், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.