பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: முதல் பரிசு ரூ.10 லட்சம்
தேனி, நவ. 25: தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு 2025-2026ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அதனடிப்படையில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக https://theni.nic.in என்ற வலைதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்திலும் (tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர், அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன் இரண்டு அச்சுப் பிரதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.