போடியில் ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
போடி, ஆக. 23: போடி சின்னசவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெகதீசன். இவரது மனைவி வலசம்மா (45). வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி மாலதி (எ) டெய்சி. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேளாங்கண்ணி-டெய்சி தம்பதியினர் வலசம்மாவிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றனர். ஆனால், பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வலசம்மா தன் கணவருடன், வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்று கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது வேளாங்கண்ணியும், மனைவியும் சேர்ந்து பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அத்துடன் பணத்தை திரும்பக்கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன், அவர்களின் வளர்ப்பு நாயையும் கடிக்கும் படி ஏவியதாக கூறப்படுகிறது. ஆனால் நாயிடமிருந்து தப்பித்து வலசம்மாவும், கணவரும் வெளியேவந்து விட்டனர். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் வலசம்மா புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.