இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு பேரணி
தேனி, ஆக. 22: தேனி மாவட்டத்தில் உள்ள வீடற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனியில் பேரணி நடத்தி தாசில்தார் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட கிளை சார்பில் நிலமற்ற ஏழை பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் கோபால் தலைமையில் தேனியில் பேரணி நடந்தது. இந்நிகழ்விற்கு மாவட்டத் துணைச் செயலாளர் முல்லை முருகன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பேரணியை மாவட்ட துணைச் செயலாளர் அபுதாஹிர் துவக்கி வைத்தார். தேனி ரயில்வே கேட் பகுதியில் துவங்கிய பேரணி தேனி தாலுகா அலுவலகம் வரை சென்றது. பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா கோரி மனுக்களை தேனி தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.