கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேனி, ஆக.21: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக, சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்க மீனா, தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் குமரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அகவிலை படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும். சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணிபுரியும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல சத்துணவு ஊழியர்களுக்கும் பிழைப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.