மழையால் பயிர்கள் சேதம் தக்காளி விலை கடும் உயர்வு
கம்பம், நவ.19: கம்பம் பகுதியில் தக்காளியின் விலை கிடுகிடு என உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைய தொடங்கியுள்ளனர். கம்பம் மற்றும் கம்பத்தை சுற்றியுள்ள கே.கே.பட்டி, கூடலூர், எரசை, அபிபட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நாள்தோறும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் கடும் சேதம் அடைந்தன.
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு முல்லைப் பெரியாறு ஆற்றில் காணப்பட்டது. அதன் எதிரொலியாக இந்த மாதம் தக்காளியின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கி நேற்று கிலோ ரூ.50 வரை கம்பம் உழவர் சந்தையிலும், ரூ.70 வரை வெளிமார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதனால் தக்காளியின் விலை உயர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.