மீனவ இளைஞர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி
தேனி, நவ.18: தேனி மாவட்டத்தில் மீன்வளத்துறை மூலம் மீனவர் பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு, மீன்வளத்துறை - மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையம் இணைந்து மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
தேனி மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டிற்கு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்படிவம் மற்றும் வழிகாட்டுதல் வழிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், வைகை அணை பார்க் ரோடு, பெரியகுளம் தாலுகா, தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.