வைகை அணையில் மீன்கள் வரத்து குறைவு
ஆண்டிபட்டி, ஆக. 18: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் தேக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு அதிகளவு மக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தனியார் நிர்வாகம் மூலம் மீன்பிடி நடைபெற்று வருகிறது. வைகை அணையில் கட்லா, ரோகு, ஜிலேபி கெண்டை ஆகியவகை மீன்கள் அதிகம் பிடிப்படுகிறது.
இயற்கையாக வளரும் ஜிலேபி கெண்டை மீன்களையே பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியாக அதிகரித்துள்ள நிலையில், மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதில்லை. மேலும், மாவட்டத்தில் காற்று வீசும் அளவும் அதிகரிப்பதால் வலையில் மீன்கள் சிக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், ஒரு டன் கிடைக்க வேண்டிய இடத்தில் 200 கிலோ அளவிற்கு மட்டுமே மீன்கள் கிடைக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் வைகை அணையில் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால், குறைந்த அளவிலேயே மீன்கள் கிடைத்ததால் போட்டி போட்டு வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.