வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது முல்லையாற்று தடுப்பணையில் குளிக்க அனுமதிக்கக் கூடாது
தேனி, அக். 17: தேனி அருகே வீரபாண்டியில் மாரியம்மன் கோயில் அருகே முல்லைப்பெரியாறு செல்கிறது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வீரபாண்டி முல்லையாற்றில் தண்ணீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், வீரபாண்டி வழியாக கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேன், கார்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் முல்லைப்பெரியாறு அணையின் தடுப்பணை பகுதிக்கு சென்று குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
அதேசமயம், தடுப்பணையில் குளிக்கும்போது, சிலர் பலியாகி வரும் நிலையில், தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குளிக்க அனுமதி அளிக்கக் கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, வீரபாண்டி முல்லையாற்று தடுப்பணை பகுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் குளிக்க செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.