கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
கம்பம், அக்.16: கம்பத்தில், மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (33). தச்சு தொழிலாளி. நேற்று இவர், கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் தெருவில் உள்ள மறவர் மன்றம் அருகேயுள்ள வீட்டின் மாடியில் தகர செட் அமைப்பதற்காக கம்பிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பியை எடுத்து செல்லும் போது வீட்டின் மாடி அருகே சென்ற மின்சார கம்பி மீது எதிர்பாரத விதமாக உரசியது.
இதில் மின்சாரம் பாய்ந்து கருப்பசாமி தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.