மூணாறு அருகே ஆட்டோவிற்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை
மூணாறு, ஆக.14: மூணாறு அருகே, வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் மூணாறு அருகே ராஜாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கொச்சி முல்லகானம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் வழக்கம் போல் ராஜேஷ், சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை, அருகே உள்ள வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அதிகாலை வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டனர். இதில் ஆட்டோ மளமளவென எரிந்தது. இதனையறிந்த அப்பகுதியினர், உடனடியாக ராஜேஷிற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அப்பகுதியினர் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றும், ஆட்டோ முழுவதும் தீயினால் சேதமடைந்தது. இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜாக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.