கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்: ஊராட்சி செயலருக்கு வனத்துறை கடிதம்
மூணாறு, டிச. 13: கேரளா மாநிலம் மூணாறு அருகே நல்லதண்ணி கல்லார் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான கழிவுகள் சேகரிக்கும் மையம் உள்ளது. இங்கு 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு மூணாறு நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து உணவு, பிளாஸ்டிக், காய்கறி போன்ற கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. வனப்பகுதியோடு சேர்ந்துள்ள இடம் என்பதால் இங்கு வரும் காட்டு யானை காய்கறி கழிவுகளை கொட்டி இருக்கும் இடத்திற்கு சென்று கழிவுகளை சாப்பிடுவதும் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் வழிமறித்து நிற்பதும் நிரந்தரமாக தொடர்கிறது. மேலும் கழிவுகளுடன் பிளாஸ்டிக் பை, பேப்பர், சாக்கு ஆகியவற்றையும் சாப்பிடுவதால் யானைக்கு உடல் நலக்குறைவு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் கல்லார் பகுதியில் செயல்பட்டு வரும் கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்குள் காட்டு யானைகள் நிரந்தரமாக வராமல் தடுக்க ஆலையை சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என்று மூணாறு ஊராட்சி செயலருக்கு வனத்துறை ரேஞ்சர் பிஜூ சோமன் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் நகரில் இருந்து சேகரிக்கப்படும் இரும்பு, பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை வன விலங்குகள் செல்லும் பாதையில் வீசுவதை தவிர்க்க வேண்டும். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், ஆலையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு போன்றவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.