தேனி நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, அக்.11: தேனி மாவட்ட நீதிமன்றங்கள் முன்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியை அவமதித்த வழக்கறிஞரைக் கண்டித்து தேனி வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமானப்படுத்த முயற்சி செய்த வக்கீல் ராக்கேஷ் கிஷோர் செயலை கண்டித்தும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அவரது வழக்கறிஞர் தொழிலை நிரந்தரமாக தடை செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் முத்து, அரசன், முத்துச்செல்வம், அழகேந்திரன், சந்திரசேகர், வித்யா மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.