மொட்டை மாடியில் ஆண் மர்ம சாவு
ஆண்டிபட்டி, செப். 11: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுகந்தி (47). இவரது கணவர் நாகராஜ் (53). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவருக்கு திருமணம் முடித்து வெளியூரில் வசித்து வருகின்றனர். நாகராஜ் வீட்டை கவனிக்காமல் தான்தோன்றித்தனமாக திரிந்து வந்ததாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பின்னர் கடந்த 8ம் தேதி வீட்டில் செருப்பு வெளியே கிடந்ததாகவும், இதனால் நாகராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டார் என நினைத்து சுகந்தி, அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். பின்னர் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, நாகராஜ் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் நாகராஜ் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நாகராஜ் இறப்பு சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.