ரசாயன உரங்களை குறைங்க
தேனி, செப். 11: உயர் விளைச்சல் ரகங்களுக்கு ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும். ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடு அடைந்து மண் வளம் குன்றி மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது. இதனை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவது அவசியம். ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைகிறது.
உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன் பெற வேண்டும் எவ வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.