குமுளி மலைச்சாலையில் குவிலென்ஸ் சரி செய்யப்படுமா?
கூடலூர், ஆக. 8: லோயர் கேம்பில் இருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 6 கிலோ மீட்டர் பல ஆபத்தான வளைவுகளைக் கொண்ட மலைச்சாலை உள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வாகன விபத்துகளை தடுக்கும் வண்ணம் வளைவுகளில் வரும் வாகனங்களை எதிர்ப்புறம் வரும் வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம் முக்கிய இடங்களில் குவிலென்ஸ் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த சாலையின் வளைவுகளில் பொருத்தப்பட்டுள்ள குவிலென்சுகள் சில இடங்களில் பழுதடைந்து, சேதமடைந்து காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலம் என்பதாலும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பழுதடைந்த குவிலென்ஸ்களை உடனே சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.