சின்னமனூர் அருகே மர்மபொருள் வெடித்து மாட்டின் வாய் சிதறியது
சின்னமனூர், அக். 7: சின்னமனூர் அருகே, மேய்ச்சலின்போது மர்மப் பொருள் வெடித்து எருமை மாட்டின் வாய்ப்பகுதி சிதறியது.
சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் கலையரசன். இவர் எருமை மாடு பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை எருமை மாடு ஒன்று எரசக்கநாயக்கனூர் சின்ன ஓவுலாபுரம் பிரிவு பழைய டாஸ்மாக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வாய்க்கால் மேட்டில் செடி கொடிகள், புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு கிடந்த மர்ம பொருள் ஒன்று வெடித்தது. இதில் எருமையின் முகம் சிதைந்து ரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்து கலையரசனுக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த கலையரசன் அந்த எருமையை உடனடியாக கேரள வியாபாரியிடம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். வெடித்தது வெடிகுண்டா அல்லது பன்றிக்காக வைக்கப்பட்ட கன்னிவெடியா அல்லது வேறு ஏதேனும் வெடிபொருளா, சதிச்செயலுக்காக புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.