மக்கள் குறைதீர் கூட்டத்தில் 184 மனுக்கள் குவிந்தன
தேனி, அக். 7: தேனியில் கலெக்டர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களிடம் இருந்து 184 மனுக்கள் பெறப்பட்டன.
தேனியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தின் போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 184 கோரிக்கை மனுக்களை கலெக்டர் ரஞ்சித் சிங் பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) முத்து மாதவன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.