கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நாளை நடக்கிறது
தேனி, ஆக.7: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை சிறப்பு கைத்தறி கண்காட்சி நடக்க உள்ளது. கிராமப்புற பகுதிகளில் வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக கைத்தறி உள்ளது. கடந்த 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், உள்நாட்டுத் தொழில்களை, குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவித்தது.
அந்த வகையில், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.
கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பொருளாதாரா ரீதியாக மேம்படுத்துவதற்கும், அவர்களின் நேர்த்தியான கைவினைத்திறனின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்து கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் வகையில் ஆக.7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
11-ஆவது தேசிய கைத்தறி தினவிழாவையொட்டி நாளை (8ம் தேதி) கைத்தறித்துறையின் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைக்க உள்ளார். இக்கண்காட்சி காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்கள் அரசு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.