கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
தேனி, டிச.4: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சித் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரகுரு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் தங்கவேலு, தேனி நகரச் செயலாளர் பரமன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் அருந்தமிழ் அரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் 1958ம் ஆண்டு அருந்ததியர் மக்களுக்கு வாசுகி காலனி என பெயரிட்டு குடியிருப்புகள் வழங்கப்பட்டது. இக்குடியிருப்புகளுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்பட வில்லை. எனவே வாசுகி காலனி குடியிருப்பாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். மேலும் பூமிதான நிலம் சார்பாக 20 அருந்ததியர் பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது. அதற்கு பதிலாக மாற்று நிலத்தை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.