பெரியகுளம் அருகே சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பெரியகுளம்,டிச.4: பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கைலாசநாதர் கோயில் நுழைவாயிலில் உள்ள வரவேற்பு வளைவில் ஒரு சமுதாயத்தின் பெயரை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பெரியகுளம் அருகே கைலாசம்பட்டி உள்ளது. கைலாசம்பட்டியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் முன்புறம் வரவேற்பு வளைவு உள்ளது. இந்த வரவேற்பு வளைவில் ஒரு சமுதாயத்தினர் பெயர் எழுதப்பட்டிந்ததை நீக்க வலியுறுத்தி மற்றொரு சமுதாயத்தினர் நேற்று காலை தேனி-பெரியகுளம் சாலையில் கைலாசப்பட்டி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானம் பேசி போராட்டத்தை கைவிடச் செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.