குமுளி அருகே காஸ் ஏஜென்சி ஊழியர்களை தாக்கிய தந்தை, மகன் கைது
மூணாறு, அக். 4: இடுக்கி மாவட்டம் குமுளி ஊராட்சிக்கு உட்பட்ட அணைக்கரை பகுதியில் எரிவாயு இணைப்பு வழங்கச் சென்ற ஏஜென்சி ஊழியரைத் தூணில் கட்டி வைத்துத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கரை அருகே மேல்வாழவீடு என்ற பகுதியில் வசித்து வரும் சில வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் விநியோகத்திற்காக வெள்ளாறம்குன்று பகுதியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியின் ஊழியர்களான ஜிஸ் மோன் சன்னி (28) மற்றும் ப்ரதீக்ஷா ஆகியோர் கடந்த 1ம் தேதி புதன்கிழமை மாலை சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்பனை நடத்தும் பால்பாண்டி, அவரது மகன் அசோகன் ஆகியோர் தங்களது விற்பனை பாதிக்கப்படும் என்று கூறி எரிவாயு ஏஜென்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பால்பாண்டி மற்றும் அசோகன் ஆகியோர் ஜிஸ் மோன் சன்னியை கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
இதைத் தடுக்க முயன்ற பெண் ஊழியரையும் ப்ரதீக்ஷாவையும் அங்கிருந்த பெண்கள் தாக்கி, அவதூறாகப் பேசியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வண்டன்மேடு போலீசார் ஜிஸ் மோன் சன்னி மற்றும் ப்ரதீக்ஷா ஆகிய இருவரையும் மீட்டு அருகில் உள்ள கட்டப்பணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் பால்பாண்டி, அவரது மகன் அசோகன் ஆகிய இருவரையும் வீட்டில் வைத்து கைது செய்தனர்.