அவகோடா அறுவடை பணி மும்முரம்
கொடைக்கானல், நவ. 1: கொடைக்கானல் மலைப்பகுதியில் மருத்துவ குணமிக்க அவகோடா பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பட்டர் புரூட் என அழைக்கப்படும் இந்த பழங்களை சாப்பிடுவதால் கேன்சர் வருவதை தடுக்கும், ஜீரண கோளாறு, பார்வை குறைபாட்டை தவிர்க்கும், உடல் எடையை குறைக்கும், இதய கோளாறு, அல்சர், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அவகோடா பழங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. கொடைக்கானலில் தற்போது இரண்டாம் கட்ட அவகோடா பழ அறுவடை பணி நடந்து வருகிறது. இவற்றிற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் அதாவது கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் இருந்து அவகோடா பழங்கள் கோவா, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.