கொலை செய்ய திட்டம் தீட்டிய வாலிபர் கைது
திண்டுக்கல், அக். 29: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்ஐ அங்கமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல்- திருச்சி சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். அப்போது போலீசார் மீது காரை ஏற்றுவது போல் வந்து தப்பிக்க முயற்சித்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திண்டுக்கல் எம்.எம்.கோவிலூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார் (30) என்பதும், இவர் மீது தாலுகா போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.