ஆடுகளை கடித்ததாக கூறி நாயை தூக்கிலிட்டு கொடூர கொலை: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
வருசநாடு, நவ. 28: ஆடுகளை கடித்ததாக கூறி நாயை தூக்கில் தொங்கவிட்டு, சித்ரவதை செய்து கொல்லும் கொடூர காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடமலைக்குண்டு கிராமத்தில் காய்கறி வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் வீசப்படும் காய்கறி கழிவுகளை ஆடுகள் தின்று வருகின்றன. இவைகளை அப்பகுதியில் உள்ள ஒரு நாய் கடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த சிலர், சம்பவத்தன்று அந்த நாயை பிடித்து வந்து சந்தைப் பகுதியில் கடை அமைக்கும் கம்புகளை எடுத்து ஊன்றி அதில் நாயை தூக்கிட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சுமார் 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சியை பார்த்து பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், நாயை கொடூரமாக கொன்றவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.