சின்னமனூர் அருகே ஆக்கிரமிப்பு செடி, கொடிகள் அகற்றம்
சின்னமனூர், நவ.27: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பிரிவில் இருந்து வேப்பம்பட்டி, அழகாபுரி வழியாக தேனிக்கும், வருசநாடு கண்டமனூர் பிரிவுக்கும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் சீலையம்பட்டி பிரிவில் துவங்கி சமத்துவபுரம், வேப்பம் பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி பிரிவு வரை இரு புறங்களிலும் சாலையை மறைக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்தும், முட்புதர்களாகவும் காட்சியளித்தது. இந்த சாலையில் தொடர்ச்சியாக பஸ்கள், விவசாய வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இதனால் எதிரெதிரே வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், வளைவுகளில் எதிரேவரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சாலையை மறைக்கும் வகையில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, பள்ளமாக இருந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது சாலை தெளிவாக தெரிவதுடன் விரிவாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் சென்று வரும் வாகன ஓட்டுநர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.