தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்களில் 19,950 பேர் விண்ணப்பம்
தேனி, நவ.27: தேனி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் 17 ஆயிரத்து 950 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இணையம் வழியாக 8 ஆயிரத்து 788 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மற்றும் இணைய வழி என சேர்ந்து 26 ஆயிரத்து 738 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு அன்றைய தினத்திற்கு முன்னர் பிறந்த, தகுதியுடைய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழை திருத்தம், பெயர் நீக்கம் தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் கடந்த அக்.29ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை இரண்டு கட்டங்களாக நடத்திட அறிவுறுத்தியது. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 1226 வாக்குச் சாவடிகளில் முதற்கட்ட சிறப்பு முகாம் கடந்த 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் நடந்தது. இதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் கடந்த 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் நடந்தது. இதில் 16ம் தேதி நடந்த முகாம்களில் வாக்காளர்கள் சேர்த்தலுக்கான படிவம் 6ஐ 2 ஆயிரத்து 814 பேரும், நீக்கலுக்கான படிவம் 7ஐ 277 பேரும், திருத்தத்திற்கான படிவம் 8ஐ 845 பேரும் விண்ணப்பித்தனர். தொடர்ந்து 17ம் தேதி நடந்த முகாம்களில் வாக்காளர்கள் சேர்த்தலுக்கான படிவம் 6ஐ 3 ஆயிரத்து 766 பேரும், நீக்கலுக்கான படிவம் 7ஐ 197 பேரும், திருத்தத்திற்கான படிவம் 8ஐ 1408 பேரும் விண்ணப்பித்தனர்.
இரண்டாம் கட்டமாக 23ம் தேதி நடந்த முகாமில் வாக்காளர்கள் சேர்த்தலுக்கான படிவம் 6ஐ 2 ஆயிரத்து 438 பேரும், நீக்கலுக்கான படிவம் 7ஐ 213 பேரும், திருத்தத்திற்கான படிவம் 8ஐ 1075 பேரும் விண்ணப்பித்தனர்.
24ம் தேதி நடந்த முகாமில் வாக்காளர்கள் சேர்த்தலுக்கான படிவம் 6ஐ 3 ஆயிரத்து 227 பேரும், நீக்கலுக்கான படிவம் 7ஐ 334 பேரும், திருத்தத்திற்கான படிவம் 8ஐ 1356 பேரும் விண்ணப்பித்தனர். இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் சேர்த்தலுக்கான படிவம் 6ஐ 12 ஆயிரத்து 245 பேரும், நீக்கலுக்கான படிவம் 7ஐ 1021 பேரும், திருத்தத்திற்கான படிவம் 8ஐ 4 ஆயிரத்து 684 பேரும் விண்ணப்பித்தனர். இதன்படி, சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் என மொத்தம் 17 ஆயிரத்து 950 விண்ணப்பங்களை வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் அளித்துள்ளனர். மேலும், இவ்விண்ணப்பங்கள் தவிர கடந்த 24ம் தேதி வரை இணையவழியாகவும், நேரடியாகவும், 8 ஆயிரத்து 788 படிவங்கள் பெறப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் மற்றும் இணைய வழி என சேர்ந்து 26 ஆயிரத்து 738 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலானது வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 28ம் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் நேரடியாகவும், நேரில் வர இயலாதவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.