தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
தேனி, ஆக. 19: தபால் துறையின் சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால்தலை சேகரிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் கூறியதாவது, அஞ்சல் துறையின் சார்பில் தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற பெயரில் கல்வி உதவித்தொகை திட்டம் தபால் தலை சேகரிக்கும் மாணவ - மாணவிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியர்கள் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் தபால் தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ அல்லது தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த உதவித்தொகை தொடர்பான விபரங்களுக்கும், விண்ணப்பத்தையும் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்கள் வருகிற செப்டம்பர் 1. ம் தேதிக்குள் தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் மதுரை மண்டலம் மதுரை - 625 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.