ஒடிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
தேனி, செப். 14: ஒடிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூவரை மதுவிலக்கு போலீசார் தேவதானப்பட்டியில் கைது செய்தனர். தேனி மாவட்ட மதுவிலக்கு போலீசார் நேற்று முன் தினம் தேவதானப்பட்டியில் உள்ள பை-பாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பெண் உட்பட மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நம் மூவரிடமும் இருந்த பைகளை சோதனையிட்டனர். சோதனை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோவு முத்தையா (55), மற்றும் கூடலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) என்பதும், அவர்களுடன் இருந்த பெண் ஆந்திர மாநிலம் அனங்கபள்ளி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமியம்மா என்பதும் தெரிய வந்தது.
மேலும் மூன்று பேரும் விற்பனைக்காக ஒடிசாவிற்கு சென்று ஆந்திரா வழியாக கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது. இதில் சோவுமுத்தையாவிடமிருந்து 16 கிலோ 470 கிராம் கஞ்சாவும், கார்த்திக்கிடமிருந்து 8 கிலோ 250 கிராம் கஞ்சாவும், மகாலட்சுமியம்மாவிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சாவுமாக மொத்தம் 28 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.