வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
வருசநாடு,டிச.11: வருசநாடு கிராமத்தில் 6வது, 7வது, 12வது வார்டு பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்கின்றனர். இங்கு கடந்த 60 ஆண்டு காலமாக வீட்டுமனை பட்டா இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை கிராமசபை கூட்டங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்றனர்.
இதுகுறித்து கிராமவாசிகள் கூறுகையில், ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். ஆனால் தேர்தல் பணி முடிந்தவுடன் எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் இலவச வீட்டுமனை பட்டா இல்லாமல் அரசு இலவசமாக கொடுக்கின்ற பசுமை வீடு திட்டம், தொகுப்பு வீடு திட்டம், பராமரிப்பு வீடு திட்டம் போன்ற எவ்வித அடிப்படை திட்டங்களையும் பயனடைய முடியவில்லை. மேலும் வங்கிகளில் கடன் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்றார். இதனால் தேனி மாவட்ட கலெக்டர் எங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.