அசுரவேகத்தில் பறக்கும் தனியார் பஸ்களால் ஆபத்து
தேனி, டிச.3: தேனி மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டை விட்டு கிளம்பியதும் மெயின் ரோட்டை பிடித்ததும் கண் மூடித்தனமான வேகத்தில் சில தனியார் பஸ்கள் இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் தனியார் பஸ்களை கடந்து செல்கின்றனர். சில தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை. அரசு பஸ்களில் பயணிகளை ஏற்றுவதற்க்கு முன் தங்கள் பஸ்களில் ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சொன்ன கட்டளைக்கு கட்டுப்பட்டு எதிரில் வரும் வாகனங்களை கண்டு கொள்ளாமல் அதிக ஒலியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வாகனத்தை இயக்குகின்றனர்.
இதனால் இப்பகுதியில் வாகன விபத்து தொடர் கதையாகிறது. தனியார் பஸ்கள் மீது வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், கூடுதலான தனியார் பஸ்களின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளதாக பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லும் தனியார் பஸ் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.