வாலிபரின் டூவீலர் தீப்பிடித்து எரிந்தது
சேலம், ஜூலை 5: மேட்டுப்பாளையத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாலிபரின் டூவீலர் சேலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். புதுச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்தவர் சதானந்தம். இவரது மகன் நாத் (32). பட்டதாரியான இவர் கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். புதுச்சேரியில் இருந்து டூவீலரில் வேலைக்கு செல்லும் இவர், வார இறுதிநாளில் டூவீலரில் ஊருக்கு செல்வார். அதன்படி நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டார். டூவீலர் சேலம் சீரகாப்பாடி அருகில் வந்துகொண்டிருந்தபோது, கரும்புகை வாசம் வந்தது. இதையடுத்து உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி வாகனம் முற்றிலும் எரிந்து போனது. உஷாராக வண்டியை நிறுத்தியதால் நாத் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்த தகவலின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.