மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பதிவை பிலிம்மாக வழங்காமல் செல்போனில் அனுப்பும் அவலம்: நோயாளிகளிடம் எக்ஸ்ரேவிற்கு கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுராந்தகம், ஜூலை 9: மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பதிவு விவரங்களை பிலிம்மாக வழங்காமல் ஆண்ட்ராய்டு போனில் அனுப்புவதால் நோயாளிகள் அவதி அடைந்து வருவகின்றனர். மேலும் ரூ.150லிருந்து ரூ.200 வரை வசூல் செய்கின்ற ஊழியர்கள் மீது நோயாளிகள் குற்றச்சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் 1000 மேற்பட்ட புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. காலை 7.30 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள் 9 மணி வரை வருவது கிடையாது. எலும்பு முறிவு கண்டறியும் எக்ஸ்ரே எடுப்பதற்கு அரசு கட்டணமாக ரூ.50 பெறப்படுகிறது.
ஆனால், இவர்கள் ரூ.150லிருந்து ரூ.200 வரை வசூல் செய்கிறார்கள். மேலும், சில ஊழியர்கள் எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகளிடம் மருத்துவமனைக்கு எக்ஸ்ரே பிலிம் சப்ளை இல்லை. அதனால், உங்களுடைய மொபைல் போனுக்கு அனுப்பி விடுகிறோம் என தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு வரும் அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துவதில்லை. ஒருசிலர் பட்டன் போன்கள்தான் பயன்படுத்துகிறார்கள். இதில், பலர் போன் வைத்திருப்பதே இல்லை. பிலிம் இல்லை என தெரிவித்து அவர்களிடம் பணம் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் மருத்துவமனையில் மருந்தோ, மாத்திரையோ இது போன்ற எக்ஸ்ரே பிலிம்மோ இல்லாத பட்சத்தில் உடனடி தேவைக்காக உள்ளூரில் கொள்முதல் (லோக்கல் பர்ச்சேஸ்) செய்து கொள்வது வழக்கம். தினசரி குறிப்பிட்ட ஒரு தொகைக்கு கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அரசு விதி உள்ளது. ஆனால் எக்ஸ்ரே பிரிவு ஊழியர்கள், எக்ஸ்ரே பிரிவில் என்னென்ன பொருட்கள் இல்லை என்று மருத்துவ அலுவலருக்கு தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது. இது போன்ற செயல்கள் கடந்த சில வாரங்களாக மருத்துவ ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். இதனால் ஏழை நோயாளிகளும் அவரது உறவினர்களும் மதுராந்தகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இங்கு எல்லா வசதிகளும் இருந்தும் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியத்தால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. இது போன்ற மோசமான நிலையினை உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என நோயாளிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். எக்ஸ்ரே பதிவு விவரங்களை பிலிம்மில் வழங்காமல் நோயாளிகளின் செல்போனுக்கு அனுப்புவதாக கூறும் ஊழியர்களின் மீதும் கூடுதலாக பணம் வசூலிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.