கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செங்கத்தில் 13ம் தேதி துணை முதல்வர் திறக்க உள்ள
செங்கம், ஜூலை 9: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத்நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா வரும் 13ம் தேதி நடக்கிறது. சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் வெண்கல சிலையை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. துணை முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிலை நிறுவப்பட்ட இடத்தில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் சுமார் 60 அடியில் கலைஞர் சிலை அருகாமையில் திமுக கொடி கம்பம் அமைப்பதற்கான பணிகளும் முழுமையாக முடிந்தது.
கலைஞரின் சிலையை சுற்றி கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகளும் முடிவடைந்தது. இந்த பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையின்போது மேடை அமைக்கும் இடம், அன்றைய நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். துணை முதல்வர் வருகையின்போது பொதுமக்கள் கண்டு ரசிக்கும்படி விழா மேடை அமைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மும்முனை சந்திப்பு மையப்பகுதியில் ரூ.1 கோடியில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தடுப்புகள், பூச்செடிகள், சில்வரில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளை பார்வையிட்டார். துணை முதல்வரின் வருகையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள், போக்குவரத்து வசதி, விழா மேடை பல்வேறு இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடக்கக்கூடிய பகுதிகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் சாதிக்பாஷா, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன் ஏழுமலை, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ராமஜெயம், எஸ்.எஸ்.சேட்டு, கூட்டுறவு சங்க தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சத்தார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.