திருத்தணி தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: கலெக்டரிடம் எம்எல்ஏ மனு
திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை நேற்று கலெக்டர் மு.பிரதாப்பிடம், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் நேரில் வழங்கினார்.
அந்த மனுவில், அரசுப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் நிதியுதவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, சுடுகாட்டுக்கு சாலை வசதி, சுற்றுச்சுவர் வசதி, கிராம பகுதிகளில் சாலை வசதி, புதிதாக உருவாகி வரும் நகர் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இருந்தன.
தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதியில் அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்திருப்பதை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை சமாதானம் செய்த எம்எல்ஏ, அவர்களது கோரிக்கை மனுவைப்பெற்று கலெக்டரிடம் வழங்கினார். நிகழ்வின்போது, திமுக ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், சந்திரன், சம்பத், விஜயகுமார், ரமேஷ், நிர்வாகிகள் செங்குட்டவன், திருவேங்கடம், மோகன், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.