தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் பூட்டிக்கிடக்கும் கடைகள்
தஞ்சாவூர், நவ 25: தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் அதிக வாடகை வசூல் செய்வதால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் பூட்டியே கிடைக்கிறது. எனவே கடை வாடகையை மாநகராட்சி நிர்வாகம் குறைக்க வேண்டும் என காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் அரண்மனை வாளகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20.26 கோடியில் 4.1 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் காய்கறி மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அங்கு 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் உள்ளன. அங்கு காய்கறிகள் கடைகள், தேங்காய் மண்டிகள், வெங்காய மண்டிகள் என்று மொத்த கடைகள், சில்லறை கடைகள் என 288 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதேபோல் காலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காலை முதல் மாலை வரை தினமும் இந்த காய்கறி மார்க்கெட் பரபரப்பாகவே செயல்படும். தஞ்சை மாநகராட்சி மூலம் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் கடைகளுக்கான வாடகை அதிகளவில் வசூலிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு சுமார் 50 சதவீதத்துக்கு மேல் கடைகள் பூட்டிய உள்ளது. வாடகை அதிகம் இருப்பதால் கடைகளை எடுக்க வியாபாரிகள் யாரும் முன்வருவதில்லை. எனவே தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு போதிய அளவு வாடகை வசூலிக்க வேண்டும் என காய்கறி கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.