தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 11 செ.மீ மழைபதிவு
தஞ்சாவூர். நவ. 25: தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வரக்கூடிய 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வடக்கூர் தெற்கு, பாச்சூர், ஆதனக்கோட்டை. அய்யம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து குளம்போல் காட்சியளிக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 13 செ.மீட்டரும் வெட்டிக்காட்டில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளன. இதன் காரணமாக வடக்கூர் தெற்கு, பொய்யுண்டார் கோட்டை. ஆதனக்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடவு செய்து 20 முதல் ஒரு வாரம் ஆன இளம் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
விளை நிலங்களில் 3 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றன. வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததால் தண்ணீர் வயலில் புகுந்துவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குறுவை அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மழையால் தற்போது நடவு செய்துள்ள தாளடி நெற்பயிர்களும் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் தண்ணீர் வடிவதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு மேல் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.